சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது - திதி
சாந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சாந்திர மாதம் (Lunar Month).
சாந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சாந்திர மாதங்கள் கொண்டது ஒரு சாந்திர வருடம் (Lunar year).
இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சாந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள் சொச்சத்துக்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும்.
கிருஷ்ண பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் (New Moon) முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர்.
சுக்ல பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர்.
வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.
. அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.
1. பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.
2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் 'one' என்ற சொல்லும் இதிலிருந்ந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.
3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் 'Three' என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.
4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும்.
5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் 'five' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் 'six' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..
7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் 'seven' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.
8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் 'Eight'என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.
9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. ஆங்கிலத்தில் ஒன்பதைக் குறிக்கும் 'Nine' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.
10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.
11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.
12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.
13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.
14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.
15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. .
இந்த திதிகளை தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும் வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.
No comments:
Post a Comment