Friday, 20 July 2012

பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு

பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு 
-----------------------------------------------------------
திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.

(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)

இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க் தரிசனப் பாடலாக உள்ளது.

கல்வெட்டு வாசகம்

னனே குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே வை த
ரை
கள

இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு

"முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண், செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"

இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர் அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.

கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச் சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில் பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.

கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா' என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment